ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் கதி என்ன?
ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் கதி என்ன?
தஞ்சாவூர்:
தஞ்சைக்கு சுற்றுலா வந்தபோது ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. நண்பனை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்தவர் மீட்கப்பட்டார்.
கல்லூரி மாணவர்கள்
சென்னை போரூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் லிதர்சன் (வயது 21). சென்னை முகப்பேரை சேர்ந்தவர் நிதின்(21). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் இருவரும் தஞ்சை பரிசுத்தம் ஓட்டல் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறையில் நின்றபடி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்
அப்போது எதிர்பாராத விதமாக லிதர்சன் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் லிதர்சன் அடித்துச்செல்லப்பட்டார். தனது நண்பன் ஆற்று தண்ணீரில் அடித்துச்செல்லப்படுவதை பார்த்ததும் அவரை காப்பாற்ற நிதின் முயன்றார்.
இதனையடுத்து அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். இருவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் இதனை பார்த்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் நிதினை மட்டுமே மீட்க முடிந்தது. லிதர்சன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
கதி என்ன?
இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி லிதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பரிசுத்தம் ஓட்டல் அருகே இருந்து பூக்காரத்தெருவில் உள்ள 20 கண் பாலம் வரை சென்று தேடினர். அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால் தேட முடியவில்லை. ஆனால் லிதர்சன் கதி என்ன ஆனது? என தெரிய வில்லை.
இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.