சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்னென்ன சாப்பிடலாம்..?
வெளியே செல்பவர்கள் தண்ணீர் கேனை எடுத்துச்செல்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கத்தரி வெயில் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அதேபோல் கடுமையான அனல் காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கோடையின் உக்கிரத்தை உணர்ந்து. பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடவேண்டாம் என்று தமிழக அரசும் எச்சரித்து உள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்னென்ன சாப்பிடலாம்:-
கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்கள், பழவகைகளை சாப்பிட வேண்டும். மோர், தயிர், தர்ப்பூசணி, முலாம்பழம், இளநீர், பழச்சாறுகள் குடிக்கலாம். சிறுவர்களுக்கு மோர், பழச்சாறு, பழங்களை கொடுக்கலாம். பழைய சாதத்தை மோரில் கரைத்து கொடுக்கலாம். கம்பங்கூழ், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொடுக்க வேண்டும். வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாம்.
வயதானவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மோர், எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து குடிக்கலாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது தண்ணீர் தாகம் அதிகரிக்கும்போது குழாய் தண்ணீரை பிடித்து குடிப்போம். தண்ணீரில் கிருமிகள் இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். முடிந்தவரை தண்ணீரை சுட வைத்து ஆறவைத்து அதன்பிறகு குடிக்க வேண்டும். வெளியே செல்பவர்கள் நிச்சயம் கையொடு 1 லிட்டர் தண்ணீர் கேனை எடுத்துச்செல்வது அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். டீ, காபி அடிக்கடி குடிப்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. நீர்ச்சத்து குறைந்தால் உடலில் வெப்பம் அதிகரித்து தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அம்மை நோய்கள், வயிற்றுப்போக்கு ஏற்படும். அசைவ உணவுகளை முடிந்த வரை குறைத்துக்கொள்ளலாம். சிக்கன் சாப்பிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். ஏற்கனவே வெயிலின் வெப்பம் ஒருபுறம், சிக்கன் சாப்பிடுவதால் வெப்பம் மறுபுறம் என உடலின் வெப்பநிலை அதிகரிப்பால் நோய்கள் தாக்கும். அதனால் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
ஆட்டிறைச்சி, மீன், முட்டை சாப்பிடலாம். அவ்வாறு அசைவ உணவை சாப்பிட்டால் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் அசைவ உணவு செரிமானம் ஆவதற்கு வழக்கத்தை விட கூடுதல் தண்ணீர் நமக்கு தேவைப்படும். புரோட்டீன் அதிகம் உள்ள உணவை சாப்பிடும்போது நமக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். முடிந்தவரை தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
வெயிலில் இருந்து தப்பிக்க ஒருநாளைக்கு 2 முறை குளிக்க வேண்டும். அதுபோல் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெயிலில் சுற்றித்திரிய வேண்டாம். இதன் மூலமாக தோல் நோய், கொப்புளங்களை குறைக்க முடியும். அம்மை நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
இந்த கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சூடுபிடித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தண்ணீர் அதிகம் குடிப்பதே சிறந்தது. அதுபோல் சிறுநீரக கல் வர வாய்ப்பு அதிகம். தண்ணீரே சிறந்த மருந்தாக இருக்கும். கோடை காலத்தில் இறுக்கமான ஆடைகளை தவிருங்கள். தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.