மின்இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாளை வீசிய பெண்


மின்இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாளை வீசிய பெண்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:30 AM IST (Updated: 11 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே மின்இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாளை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குட்டி மனைவி பூபதி (வயது 74). கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். மேலும் தனது வீட்டிற்கு உரிய மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என மின்வாரியத்தில் பூபதி கடந்த சில மாதங்களுக்கு முன் மனு அளித்து இருந்தார். மனுவை பரிசீலித்து மின் இணைப்பு கொடுப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். ஆனால் சிலர் மின் இணைப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் பூபதியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க சென்றனர். அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்ட போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்பனா (55) என்பவர் அரிவாளுடன் வந்தார். அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மின்கம்பத்தில் இருந்த மின்வாரிய ஊழியரை நோக்கி அரிவாளை வீசி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர் கணேசன் ஆழ்வார்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். உதவி பொறியாளர் ஜீவானந்தம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கல்பனா மீது அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ெகாலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story