மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; கனிமொழி எம்.பி. வழங்கினார்
நாலாட்டின்புத்தூர் அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
குறை தீர்க்கும் முகாம்
நாலாட்டின்புத்தூர் அருகே கிழவிபட்டியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கிழவிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இதுவரை 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். மேலும் கிராமப்புற மக்களுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைய பணிகளை செய்து கொடுத்துள்ளார். அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி மற்றும் வாறுகால் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு ரூ.1000 உதவி தொகையானது வழங்கப்படும் என்றார்.
பயணிகள் நிழற்குடை
தொடர்ந்து பயனாளிகள் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
பின்னர் அருகே உள்ள கரிசல்குளம், துறையூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராய், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, வேளாண்மை துறை உதவி இயக்குனர் நாகராஜ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், துறையூர் கணேசபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.