பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

285 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன் முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். அதாவது, 4 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 11 திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை வழங்கினார். தமிழ்நாட்டில் முதன் முறையாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு செய்வதற்கு வணிக ரீதியிலான தொழில்நுட்ப தையற்கருவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகரிடம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் கிராமத்தைச் சேர்ந்த பனைதொழிலாளி வேலையா என்பவர் தனக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையறிந்த கலெக்டர் செந்தில்ராஜ், உடனடியாக மாவட்ட வழங்கல்துறையின் மூலம் புதிய மின்னணு குடும்ப அட்டையினை வேலையாவுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story