மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்புவனத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.
திருப்புவனம்
கருத்தரங்கம்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில மகளிர் தொண்டரணி சார்பில் கருத்தரங்கமும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் திருப்புவனம் புதூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில மகளிர் தொண்டரணி இணைச் செயலாளரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி தலைமை தாங்கினார். மாநில தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச்செயலாளர் சொக்கம்ராஜா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். விழாவில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் செய்த சாதனைகள் குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் தீபக், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ப்ரியா பாபு, மாநில தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் பேசினார்கள்.
நலத்திட்ட உதவிகள்
பின்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினா். விழாவில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் இயன்முறை மருத்துவர், அழகுக்கலை சிகிச்சை நிபுணர் திருநங்கை டாக்டர் சோலு நன்றி கூறினார்.
போக்சோ சட்டம்
பின்பு நிருபர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, போக்சோ சட்டத்தினை தமிழக அரசு கடுமையாக செயல்படுத்தி வருகிறது என்றும், சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சா் அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை தேவை உள்ள மகளிர் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். தகுதி உள்ள அனைவரும் வருகிற 12-ந்தேதி வரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.