ரூ.18¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்
கொங்கந்தான்பாறை பஞ்சாயத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.18¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
கொங்கந்தான்பாறை பஞ்சாயத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.18¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
பாளையங்கோட்டை யூனியன் கொங்கந்தான்பாறை சமுதாய நலக்கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 98 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 61 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
முகாமில் சுகாதாரத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது::-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை- எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, தனிப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு ரூ.15 ஆயிரத்து 584 மதிப்பில் தேய்ப்பு பெட்டி மற்றும் விலையில்லா தையல் எந்திரமும், ரூ.14.85 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு டிராக்டர் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரின்ஸ்லி அருள்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி எபனேசர் (கொங்கந்தான்பாறை), முத்துக்குட்டிபாண்டியன் (புதுக்குளம்) ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் பாஸ்கர், அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.