ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு


ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு
x

நெல்லையில் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. இதை கொண்டாடும் வகையில், புதுடெல்லியில் கடந்த 13-ந் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கோப்பை சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார். அந்த கோப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கும் வகையில் சென்னையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கோப்பை நேற்று கன்னியாகுமரியில் இருந்து நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அர்ஜூனா விருது பெற்ற மணத்தி கணேசன், சர்வதேச கைப்பந்து வீரர் சிவராசு மற்றும் விளையாட்டு வீரர்கள் கோப்பைக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் அந்த கோப்பை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், கவுன்சிலர் பேச்சியம்மாள், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, நெல்லை ஆக்கி யூனிட் தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளிக்கு ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை கொண்டு வந்து அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் ராபர்ட் வரவேற்று பேசினார். கோப்பையை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் அறிமுகப்படுத்தி, வரவேற்பு அளித்தார்.


Next Story