மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் வரவேற்பு
மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
குருவாயூர் முதல் புனலூர் வரை இயக்கக்பட்ட ரெயில் மதுரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில் மதுரையில் இருந்து நேற்று புறப்பட்டு மதியம் சங்கரன்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
அந்த ரெயிலுக்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரெயில் டிரைவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 3.55 மணிக்கு தென்காசி வந்த இந்த ரெயிலுக்கு வியாபாரிகள், ெரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதனை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். தென்காசி ரெயில் பயணிகள் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் ராம.உதயசூரியன், தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரமதி, வணிகர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய் சிங் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டைக்கு வந்த ரெயிலுக்கு கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் மற்றும் செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.எம்.ரகீம் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனா்.