மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு உற்சாக வரவேற்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது/.
திருப்புவனம்,
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த பூவந்தியை சோ்ந்த அபிசித்தர் கலந்துகொண்டு 26 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றார்.
பின்பு நடைபெற்ற விழாவில் அவருக்கு முதல்-அமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட காரை அமைச்சர் மூர்த்தி பரிசாக வழங்கினார். இரவு சொந்த ஊரான பூவந்திக்கு வந்த அபிசித்தருக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயாஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன் முன்னிலையில் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பூவந்தியில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு, அதிர்வேட்டுக்கள், மேளதாளங்கள் இசைத்து ஊர்வலமாக அபிசித்தரை அழைத்து சென்றனர்.
முக்கிய பிரமுகா்கள் அபிசித்தருக்கு சால்வை அணிவித்தும், உறவினா்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
அதேபோல் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் ஆகியோர் அபிசித்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தொிவித்தனா்.