மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்


மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே படைப்புழு தாக்கப்பட்ட மக்காச்சோள பயிரை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தில் மக்களாச்சோள பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று படைப்புழு தாக்கப்பட்ட பயிரை ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக வேளாண்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியதாவது:-

மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், கரும்பு, சோளம், இனிப்பு மக்காச்சோளம், புல் வகை பயிர்கள், பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களையும் படைப்புழு தாக்கி, சேதப்படுத்தி வருகிறது.

இப்படைப்புழுக்களை கட்டுப்படுத்த மக்காச்சோளம் விதைப்பதற்கு கோடை உழவு செய்யும்போது, ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும். அவ்வாறு செய்தால் கூட்டுப்புழுவினை கட்டுப்படுத்தி அழிக்க முடியும். மேலும் வயலைச் சுற்றி வரப்பு பயிர்களான தட்டைப்பயிர், உளுந்து, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி, பயிரிடுவதன் மூலமாக படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். பயிர்சுழற்சி முறையை பயன்படுத்தியும், படைப்புழு தாக்குதலை குறைக்கலாம்.

மேலும் பயிரில் 10 சதவீதத்திற்கு மேல் தாக்குதல் காணப்பட்டால் அருகாமையில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு, படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் பெற்று பயனடையலாம் என்றார்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண் உதவி இயக்குனர்கள் அன்பழகன் (தரக்கட்டுப்பாடு), சந்துரு, பெரியசாமி, வேளாண்மை அலுவலர் வனிதா மற்றம் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story