சென்னையில் களைகட்டிய பெண்கள் கார் பேரணி - முக்கிய சாலைகளில் கரைபுரண்ட உற்சாகம்


சென்னையில் களைகட்டிய பெண்கள் கார் பேரணி - முக்கிய சாலைகளில் கரைபுரண்ட உற்சாகம்
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்று நடத்திய கார் பேரணி, நகரின் முக்கிய சாலைகளை உற்சாகப்படுத்தி சென்றது.

சென்னை

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக கருத்தை முன்னிலைப்படுத்தி இந்தியன் ஆயில், டச்சஸ் கிளப் சார்பில் பெண்கள் பங்கேற்கும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 'சுதந்திரம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கார் பேரணி அரங்கேறியது.

சென்னை மயிலாப்பூர் சவேரா ஓட்டல் வளாகத்தில் 21-வது பெண்கள் கார் பேரணியை சவேரா ஓட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சைலேந்திரா, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி அமித் அரோரா ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சுமார் 60 கி.மீ. தூரம் எல்லை கொண்ட இந்த பேரணி சவேரா ஓட்டலில் தொடங்கி ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு பகுதிகளை கடந்து மீண்டும் சவேரா ஓட்டலை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நேரு, நேதாஜி போன்ற தேச தலைவர்களின் உடைகளில் மிடுக்காக வந்தனர். அந்த உடைகளிலேயே காரை ஓட்டி சென்றனர். அதேபோல பேரணியில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்கள் பாரம்பரிய உடையிலேயே பங்கேற்றனர்.

இந்த பேரணியில் 80-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்று சென்றன. ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம்பெற்றனர். பெண்கள் தான் காரை இயக்கினார்கள். ஒருவர் காரை இயக்க, ஒருவர் வழிகாட்ட, மற்ற 2 பேர் காரிலேயே வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள என பேரணி விறுவிறுப்பாக நகர்ந்தது. மற்ற கார் பேரணிகளை விட இந்த கார் பேரணிக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு.

அதாவது குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே கார்கள் செல்லவேண்டும். முயலை போல வேகமாக போய் எல்லையை கடந்தாலோ அல்லது ஆமையை போல மெதுவாக சென்றடைந்தாலோ அந்த கார் தோற்றதாக அறிவிக்கப்படும். இதனால் அனைத்து கார்களும் சமமான வேகத்திலேயே சாலைகளில் பயணித்தன.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15-க்கும் மேற்பட்ட குழு புதிதாக கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பல குழுக்கள் குடும்ப சகிதமாகவும் பங்கேற்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த கார் பேரணி மதியம் நிறைவடைந்தது. பேரணியில் முதல் 3 இடங்கள் பெற்ற கார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


Next Story