களைகட்டிய ஆயுத பூஜை:கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுத பூஜையையொட்டி கள்ளக்குறிச்சி நகர கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
கல்வியை தொடங்கினால் சிறப்பு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை இன்றும் (திங்கட்கிழமை), விஜயதசமி நாளையும் (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆயுத பூஜையையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் ஆயுத பூஜைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விஜயதசமி அன்று கல்வியை தொடங்கினால், சிறப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஆயுத பூஜையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர். இதனால் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்க தொடங்கினர். அதன்படி பூசணி, அவல், பொரி, கொண்டக்கடலை, பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை செய்வதற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மார்க்கெட், சேலம் சாலை, துருகம் சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
தற்காலிக கடைகள்
இதேபோல் கள்ளக்குறிச்சி உழவர் சந்தை மற்றும் மந்தக்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பூசணிக்காய், பழம், காய்கறி, வாழைத்தார் உள்ளிட்டவை அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நேற்று அதிகாலை 4 மணி முதலே அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
அதேபோல் பண்டிகை காலங்களில் எப்போதும் விலை அதிகரித்து காணப்படும் வாழைத்தார், வரத்து அதிகரிப்பால் நேற்று குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
இதேபோல் மளிகை கடைகளிலும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. பொதுமக்கள் ஒரே நேரத்தில் பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம் பகுதி கடைவீதிகள், காய்கறி, பூ மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.