"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம்" - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்தது. வேட்பாளர் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.

இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம். பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழக அரசியலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், புதிய நீதி கட்சி அதனை வரவேற்கும்" என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.


Next Story