நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை,
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஜவுளி உற்பத்தி பாதிப்பு
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை நம்பி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அருப்புக்கோட்டையில் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 27-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக பல இடங்களில் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்
இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தின் இறுதி நாளான நேற்று சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நூல் விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும் எனவும் ஜி.எஸ்.டி. வரி கட்டும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் பானுமதியிடம் மனு அளித்தனர்.
மேலும் விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையை அரசின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மனு அளிக்கும் போது சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் உடனிருந்தனர்.