வாக்கு வங்கியை இழந்து விடவில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம் அவ்வளவுதான் - கே.எஸ்.அழகிரி
4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றம் அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
"4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றம் அளிக்கிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4.91 கோடி வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பா.ஜ.க. 4.8 கோடி வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்து விடவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம் அவ்வளவுதான்.
இந்த தேர்தலின்போது ராகுல்காந்தி மேற்கொண்ட பிரசாரத்தில் முன்வைத்த கருத்தியலின் அடிப்படையில் மாநில காங்கிரஸ் அமைப்புகள் அதை மக்களிடம் மேலும் கொண்டு சென்றார்களா? என்பது மிகுந்த ஆய்வுக்குரியது. அத்தகைய கருத்துக்களை தீவிரமாக முன் வைத்திருந்தால் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை முறியடித்து இருக்கலாம். அதற்கு மாறாக சில மாநிலங்களில் பா.ஜ.க.வின் கொள்கையில் மாறுபட்ட கட்சியாக காங்கிரஸ் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
ராகுல்காந்தி வகுக்கிற கொள்கை பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழுவீச்சில் செயல்படுவதுதான் இந்த தேர்தல் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தருகிற செய்தி ஆகும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.