என்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி


சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி
x

சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது தி.மு.க.,வின் கடமை. எடப்பாடி பழனிசாமிதான் உத்தம புத்திரர் போல பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.அது மீது எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறார். சிபிஐ விசாரணை தேவையில்லை. என்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை. சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story