"இதை கொள்கை முடிவாக கருதுகிறோம்"குண்டர் சட்ட உத்தரவுகளை கலெக்டர்கள் பிறப்பிப்பதே சரியானது- மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை
குண்டர் சட்ட உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிப்பதுதான் சரியானது. இதை கொள்கை முடிவாக அரசு கருதுகிறது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
குண்டர் சட்ட உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிப்பதுதான் சரியானது. இதை கொள்கை முடிவாக அரசு கருதுகிறது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கலெக்டரின் பணிச்சுமை
திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் தமிழழகன். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, "மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில், குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடுவதால், மாவட்ட கலெக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, இந்த அதிகாரத்தை ஐ.ஜி. அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அரசு அறிக்கை
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குண்டர் சட்ட உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிப்பதுதான் சரியானதாக இருக்கும். போலீஸ் ஐ.ஜி.க்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கக்கூடாது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. காவல்துறையை பொறுத்தவரை வடக்கு, மேற்கு, மத்தி மற்றும் தெற்கு என்று 4 மண்டலங்களில் 4 ஐ.ஜிக்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் சுமார் 10 மாவட்டங்கள் வருகின்றன. அதுதொடர்பான பணிகளைத்தான் அவர்களால் மேற்கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் அதிகார பிரிவு என்பது தவறான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். எனவே இதுதொடர்பான விதிகளில் திருத்தங்கள் ஏதும் செய்யத்தேவையில்லை. இதை கொள்கை முடிவாக அரசு கருதுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.