'மாணவர்கள் யாரையும் கைவிடாமல் கல்விக்குள் கொண்டு வருகிறோம்' அமைச்சர் பேச்சு


மாணவர்கள் யாரையும் கைவிடாமல் கல்விக்குள் கொண்டு வருகிறோம் அமைச்சர் பேச்சு
x

2 நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கூட ஹால்டிக்கெட்டை கொடுத்திருக்கிறோம் என்றும், மாணவர்கள் யாரையும் கைவிட மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

சென்னை,

சென்னையில் தனியார் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

தவறான செய்திகள் ராக்கெட் வேகத்தில் சென்றடைகிறது. ஆனால் உண்மை ஆமை வேகத்தில் செல்கிறது. இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை. தவறாக கொடுக்கும் செய்திகளை பகுத்தறிந்து பார்த்தவர்தான் பெரியார். யார் சொன்னாலும் நம்பாதே, நீயே படித்து பார், பகுத்தறிந்து பார் என்று சொன்னார்.

தமிழ்நாடு, தமிழன் தான் தொன்மையானவன் என்று சொல்லி வருகிறோம். நாட்டு, நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது, பெருமையானது தான். அந்த ஆஸ்கார் விருதுக்கே ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அந்த விருதுக்கு பெயர் தமிழ்நாடு என்று இருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு பெருமை கொண்ட நாடு.

2 நாட்கள் வந்தாலே ஹால்டிக்கெட்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற செய்தியை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் குறிப்பிட்ட காலம் ஒரு மாணவர் வரவில்லை என்றால் நீக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை கொடுப்பார்கள். ஆனால் இப்போது ஒரு நாள், 2 நாட்கள் பள்ளிக்கு வந்தால் கூட ஹால்டிக்கெட்டை கொடுக்கிறோம். ஏதோ ஒரு வழியில் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இப்போது செயல்படுகிறோம்.

இப்போது 50 ஆயிரம் பேர் வரவில்லை என்று அதிர்ச்சி தகவலாக சொல்கிறார்கள். முதலில் எங்களை பரிகாசம் செய்வார்கள். கிண்டல் செய்வார்கள்.. ஆனால் 'ரிசல்ட்'டை நாங்கள் கொடுக்கும்போது, எங்களை பாராட்டுவார்கள். அந்த காலத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாணவர்கள் யாரையும் கைவிட்டுவிடாதபடி, அனைவரையும் கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கீழடி அருங்காட்சியகம்

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதில்கள் வருமாறு:-

எங்களை பற்றி பலர் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நாங்கள் அந்த விமர்சனங்களை வெறும் விமர்சனங்களாக பார்க்காமல், அதில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்து, அதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

தாய்நாடு, தாய்மொழி என்று தான் சொல்கிறோம். தமிழனின் பெருமையை கொண்டு செல்கிற பணி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று சொன்னால், அது பெண்கள் தான். கீழடி அருங்காட்சியகத்தை ஒரு முறையாவது சென்று பாருங்கள்.

வறுமையை காரணம் காட்டி யாரும் பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருந்துவிடக்கூடாது. எனவே அதில் முதல்-அமைச்சர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருக்க பலர் காரணத்தை தேடுகிறார்கள். பயமுறுத்தும் அளவுக்கு தேர்வை நடத்துவது கிடையாது. படிக்காத அனைவருக்கும் தேர்வு கடினம்தான். நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும், உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இவ்வாறு பதில் அளித்தார்.


Next Story