நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க.; வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைத்திலிங்கம் பதிலடி
நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க.; வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று வைத்திலிங்கம் கூறினார்.
தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருச்சியில் மாநாடு நடைபெற உள்ள திடலில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட வந்தனர். இதில் ஆர்.வைத்திலிங்கத்திடம், அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீசில் கொடுத்துள்ள புகார் மனு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை. சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அ.தி.மு.க. கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள். அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கிறோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை.
உண்மையான அ.தி.மு.க.
இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை. கட்சி கொடி, சின்னம், கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று கோர்ட்டு கூறவில்லை.
இதுபோன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வே உண்மையான அ.தி.மு.க. ஆகும். எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாவது இடம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.