கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள வழிமுறைகள்


கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள வழிமுறைகள்
x

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

கட்டாயம் அணிய வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில், கோடைவெயில் வெப்பம் வழக்கத்தை விட அதிகம் இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு கலெக்டரால் கீழ்க்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளான உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கா விடிலும் கூட, போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சைச் சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி, கரும்பு சாறு மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். நல்லகாற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்ல கூடாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும் போது, உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

தினமும் இருமுறை

புரதம், மாமிச சத்துள்ள மற்றும் கார வகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இருதயநோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கு மயக்கம் வருதல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தோன்றினால், அவ்வாறு வெப்பத்தால் தாக்கப்பட்ட வரை நிழலான பகுதியில் இளைப்பாறவைத்து, குடிநீர், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை கொடுத்து உடலின் வெப்பத்தை சீராக கொண்டு வரவும், அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுக வேண்டும். முதியவர்களுக்கான வழிமுறைகளான தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story