தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டி


தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டி
x

மடத்துக்குளம் பகுதியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

மடத்துக்குளம் பகுதியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேய்ச்சல் நிலங்கள்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இன்றைய நிலையில் கால்நடைகளின் உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மிகப்பெரும் சிரமமாக உள்ளது. சொந்தமாக விவசாய பூமி வைத்திருப்பவர்கள் கூட மலையில்லாததால் தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் பல கிராமப்பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மழைப்பொழிவு குறைவால் புற்கள் காய்ந்து கிடப்பதால், கடும் உணவுத்தட்டுப்பாடால் கால்நடைகள் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் குளங்கள் வறண்டு கிடப்பதால் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

குப்பைத்தொட்டி

இதுபோன்ற சூழலைக் கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மூலம் கால்நடைகளுக்கான குடிநீர்த்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இந்த தொட்டிகளில் தினசரி குடிநீர் நிரப்பப்பட்டது. இந்த தண்ணீரை ஆடு, மாடுகள் மட்டுமல்லாமல் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு ஜீவன்கள் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டன.

ஆனால் தற்போது இந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. எனவே பல கிராமங்களில் இந்த கால்நடை குடிநீர்த்தொட்டி குப்பைத்தொட்டி போல குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. ஒரு சில பகுதிகளில் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பயன்பாட்டில் உள்ளது. சில இடங்களில் இந்த தொட்டிகள் படிப்படியாக சேதமடையத் தொடங்கியுள்ளன. இதனால் கால்நடைகள் தாகம் தீர்க்க முடியாமல் தவித்து வருகின்றன.

எனவே அனைத்து ஊராட்சிகளிலும் இந்த குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story