குழாய் உடைப்பால் வெளியேறும் குடிநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை


குழாய் உடைப்பால் வெளியேறும் குடிநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை
x
தினத்தந்தி 1 July 2023 10:58 PM IST (Updated: 2 July 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் குழாய் உடைப்பால் வெளியேறும் குடிநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது.

திருப்பூர்

குழாய் உடைப்பு

மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள 60 அடியில் 23.29 அடியே உள்ளது.

அணைக்கு நீர்வரத்து இன்னும் தொடங்காத நிலையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர்க் குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குடிநீர்க்குழாய் உடைப்பு நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கொசு உற்பத்தி

'பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறும் குடிநீர் சாலையோரத்தில் வழிந்து ஆங்காங்கே தேங்குகிறது. குழாய் உடைப்பு மாதக்கணக்கில் சீரமைக்கப்படாத நிலையில் அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீரில் குப்பைகள் மற்றும் கழிவுகள் விழுந்து சாக்கடை நீர் போல மாறியுள்ளது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் சூழல் உள்ளது.

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நன்னீர் கொசுக்களால் உருவாகும் டெங்கு பரவல் குறித்த அச்சம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் குடிநீர்வடிகால் வாரியத்தின் அலட்சியப் போக்கால் நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

இந்த பகுதியில் நீண்ட தூரம் வரை சாலையோரத்தில் குடிநீர் வழிந்தோடி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதில் அந்த வழியாக வரும் பொதுமக்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே உடனடியாக குடிநீர்க் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story