நல்லம்பள்ளி அருகேமேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்களால் பரபரப்புபோலீசார் விசாரணை


நல்லம்பள்ளி அருகேமேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்களால் பரபரப்புபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 April 2023 12:30 AM IST (Updated: 1 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்நிலை குடிநீர் தொட்டி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒகேனக்கல் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் சிவாடி காலனி, கந்துக்கால்பட்டி, ராமாயன சின்னஅள்ளி, சிவாடி உள்ளிட்ட 5 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா போதையில் குடிநீர் தொட்டி உள்ள பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் குடிநீர் தொட்டியின் மேற்பகுதிக்கு செல்லும் தடுப்பு பாதை வழி பூட்டை உடைத்து தொட்டியின் மேற்பகுதியில் ஏறினர். பின்னர் அவர்கள் போதையில் குடிநீரை மாசுப்படுத்தும் வகையில் தொட்டியின் மூடியை திறந்தும், வாந்தி எடுத்தும், சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதனை பார்த்து சத்தம் போட்டனர்.

விசாரணை

இதையடுத்து மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்து நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதையடுத்து குடிநீர் தொட்டி தண்ணீரை அசுத்தப்படுத்திய வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஊர் பொதுமக்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story