குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து; விரைவில் சீசன் தொடங்க வாய்ப்பு
குற்றாலம் ஐந்தருவிக்கு நேற்று நீர்வரத்து காரணமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றாலம் ஐந்தருவிக்கு நேற்று நீர்வரத்து காரணமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
ஆனால் இந்த ஆண்டுக்கான சீசன் கடும் வெயில் காரணமாக இன்னும் தொடங்கவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சி அளித்தது.
ஐந்தருவியில் தண்ணீர்
இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்தொடங்கியது. அங்குள்ள நான்கு கிளைகளில் தண்ணீர் விழுகிறது. இதனை அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வறண்டு கிடந்த அருவியில் தண்ணீர் விழ தொடங்கியதால் சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.