சேலத்தில் அதிகபட்சமாக 82.7 மி.மீ. மழை பதிவு:காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது
சேலத்தில் 82.7 மி.மீ. மழை பதிவாகியதால் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
சேலம்
சேலத்தில் 82.7 மி.மீ. மழை பதிவாகியதால் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புறநகரின் ஒருசில இடங்களில் லேசாக மழை பெய்தது. சேலத்தில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று முன்தினம் பிற்பகலில் சேலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். சில சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டதாலும் அவர்கள் அவதிக்குள்ளாகினர்.
குளம்போல் தேங்கிய தண்ணீர்
பின்னர் இரவிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பயிற்சி மேற்கொள்ள வந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மைதானத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் தாதுபாய்குட்டை, நெத்திமேடு, பச்சப்பட்டி, நாராயண நகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தண்ணீரை அகற்ற முடியாமல் பொதுமக்கள் விடிய, விடிய தவித்தனர். இதேபோல் மாவட்டத்தில் ஆணைமடுவு, ஓமலூர், கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
82.7 மில்லி மிட்டர் மழை
கன்னங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் புதுஏரி, மூக்கனேரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி சேலத்தில் 82.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஆணைமடுவு-52, ஓமலூர்-24, கரியகோவில்-5, மேட்டூர்-2.2, பெத்தநாயக்கன்பாளையம்-1.5, ஏற்காடு-1.4, சங்ககிரி-1.3, எடப்பாடி-1. சேலம் மாநகரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் மழை ஏதும் பெய்யவில்லை.