பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தம்;பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை


பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தம்;பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 7 Jun 2023 12:06 AM IST (Updated: 7 Jun 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கரூர்

உபரி நீர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் இருந்து புகளூர் வாய்க்கால் பிரிகிறது. கொடுமுடி பகுதியில் பாய்ந்தபின் நொய்யல் ஆற்றை கடந்து கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே நுழைகிறது. அதனைத்தொடர்ந்து நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, நன்செய் புகழூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக செல்கிறது.

இதனை தாய் வாய்க்காலாக கொண்டு இதில் இருந்து பாலத்துறை அருகே பிரியும் பள்ளவாய்க்கால், செம்படாபாளையம் அருகே பிரியும் பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகியவற்றில் புகளூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் திருப்பிவிடப்படுகிறது. இந்த 5 வாய்க்கால்கள் மூலம் வரும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு, நெல், வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, கோரை உட்பட பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

புகளூர் வாய்க்காலில் ஆண்டுதோறும் மே மாதம் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி புகளூர் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக காரணாம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணியில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் புகளூர் வாய்க்காலின் பராமரிப்பு பணிகள் நிறைவடையவில்லை.

விவசாயிகள் பாதிப்பு

இதன் காரணமாக இன்னும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நொய்யல் முதல் புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பணப்பயிர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் பாய்ச்சாததால் கரும்பு, வாழை, நெல், வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வெயிலில் வாடி கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற உடனடியாக புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்தினால் அனைத்து பயிர்களும் கருகி காய்ந்து விடும். அதன்பிறகு வாய்க்காலில் தண்ணீர் விட்டு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பயிர்கள் கருகி நாசமானால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். விவசாய பயிர்களால் ஏற்படும் இழப்பை மீண்டும் சரிகட்ட இயலாது. இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-

காய்ந்து கருகும் நிலை

புகளூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கதிர்வேல்:- புகளூர் வாய்க்காலில் தூர்வாருதல் மற்றும் மதகுகள் மராமத்து பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு ஒரு மாதம் முடிந்து விட்டது. இதில் தூர்வாரும் பணி மட்டும் முடிவடையும் நிலையில் உள்ளது. 40 மதகுகளில் 3 மதகுகள் மட்டுமே மராமத்து செய்யப்பட்டுள்ளது. இதே வேகத்தில் சென்றால் மீதம் உள்ள மதகுகளை மராமத்து செய்ய ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும். எனவே தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை காக்க பராமரிப்பு பணியை துரிதமாக முடித்து விரைவில் புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலத்துறை பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி:- கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெற்றிலை பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெற்றிலை கொடிகள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. புகளூர் வாய்க்காலில் மராமத்து பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மெதுவாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை உடனடியாக நிறுத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு புகளூர் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே வெற்றிலை பயிர்களை காப்பாற்ற முடியும். அதேபோல் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் நிலையில் உள்ள அனைத்து பயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தற்கொலைக்கு சென்று விடும்

நடையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சேதுபதி:- புகளூர் வாய்க்காலில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. புகளூர் வாய்க்கால் தண்ணீர் மூலம் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. பயிர்களுக்கு தண்ணீர் விடாமல் இருப்பது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. அதற்கு மேல் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் பயிர்கள் தாக்குப்பிடிக்காமல் காய்ந்து விடும். பயிர்களுக்கு ஏராளமான முதலீடுகள் இடு பொருட்களாக போடப்பட்டுள்ளது. பயிர்கள் காய்ந்து கருகினால் விவசாயிகளுடைய நிலைமை தற்கொலைக்கு சென்று விடும். வாய்க்காலில் பராமரிப்பு செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செய்ய வேண்டும். ஆனால் பராமரிப்பு என்பது நீண்டு கொண்டே செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடந்து முடிந்த வரை உள்ள பணிகளை நிறுத்திவிட்டு உடனடியாக புகளூர் வாய்க்காலில் தண்ணீரை விட்டு கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும்.

புகளூர் வாய்க்காலை நம்பியே...

புங்கோடை பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி:- புங்கோடை, நொய்யல், மரவாபாளையம் பகுதிகளில் அதிக அளவு வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெற்பயிர்களுக்கு தினசரி தண்ணீர் விட வேண்டும். அவ்வாறு தண்ணீர் விட்டால் மட்டுமே அதிக நெல்மணிகள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும். ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் விடவில்லை. ஆதலால் நெற்பயிர் வாடி வருகிறது. இதனால் விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும் நிலை உள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் நீடித்தால் மொத்த நெற்பயிர்களும் கருகிவிடும். அதேபோல் வாழைகளும் குலை ஈன்றாமல் காய்ந்து விடும். புகளூர் வாய்க்காலை நம்பியே இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உள்ளனர். இதுபோன்று எந்த வருடத்திலும் நீண்ட நாட்கள் தண்ணீர் வராமல் இருந்ததில்லை. இந்த ஆண்டுதான் அதிக நாட்கள் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் தொடங்கும் போதே காலநிர்ணயம் செய்திருக்க வேண்டியது அவசியம். அதேபோல் மதகுகள் பராமரிக்கும் பணியும் சரிவர நடைபெறவில்லை. அனைத்து பராமரிப்பு பணிகளும் மந்த நிலையிலேயே உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே வாடிய பயிர்களை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story