மேட்டூர் அணையில் இருந்துகாவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்மதகு பகுதியை அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அணையின் மதகு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அணையின் மதகு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறும்.
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்தின் தேவையை கருதி போதுமான அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 31 அடிக்கு கீழே சென்றது. இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேற்று காலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டது.
தற்போது அணையில் குடிநீருக்காக மட்டும் 8 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதுவும் குடிநீருக்கு போதுமானதாக இருக்காது. எனவே வரும் நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே அணையின் நீர்மட்டம் 31 அடிக்கு கீழே சென்றதாலும், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாலும் அணை பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையின் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் விசைப்படகு மூலம் அணையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
மேலும் அணையின் தடுப்பு சுவர் பகுதிகளிலும், அணையின் கீழ்மட்ட மதகு பகுதிக்கும் சென்று மதகின் நிலைமை மற்றும் பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.