பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு


பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு
x

பழனி அருகே முழு கொள்ளளவை எட்டிய பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து ஆற்றில் ஓடியது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலாறு-பொருந்தலாறு அணையின் முழு கொள்ளளவு 63 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 450 கன அடியாக உள்ளது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சண்முகநதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றார்.



Next Story