மேட்டூர் அணையில் இருந்து 1.3 லட்சம் கன அடி நீர் திறப்பு


மேட்டூர் அணை
x

தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை தன் உச்சமட்ட நீர்மட்டமான 120 அடியை எட்டி நிரம்பியது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனையெடுத்து இரண்டு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு 2.5 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி 1.35 லட்சம் கன அடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை தன் உச்சமட்ட நீர்மட்டமான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தற்போது 1.30 லட்சம் கன அடிநீர் வருகிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசன தேவைக்கு திறக்கப்படும் தண்ணீர் போக மீதம் உள்ள தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் வரும் நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi



Next Story