கழிவுநீர் கால்வாய் பகுதியில் குடிநீர் குழாய்கள்


கழிவுநீர் கால்வாய் பகுதியில் குடிநீர் குழாய்கள்
x

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குடிநீர் குழாய்கள் கழிவுநீர் கால்வாய் அருகில் செல்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குடிநீர் குழாய்கள் கழிவுநீர் கால்வாய் அருகில் செல்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடிநீர் வினியோகம்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் தலா 24 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவகாசி பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை என்றும், திருத்தங்கல் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. திருத்தங்கல் பகுதியில் சில இடங்களில் குடிநீர் மற்றும் புழக்கத்துக்கு பயன்படுத்தும் தண்ணீர் ஆகியவை வினியோகம் செய்ய முடியாத நிலையும் இருக்கிறது. இந்தபகுதியில் வசிக்கும் மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் தெரிவித்து வருகிறார்கள்.

குழாய்களில் பழுது

குடிநீர் மற்றும் புழக்கத்துக்கு பயன்படுத்தும் தண்ணீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும் குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. இதில் சில இடங்களில் தண்ணீர் குழாய்கள் கழவுநீர் கால்வாய் அல்லது ஓடையின் அருகில் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற இடங்களில் போடப்பட்டுள்ள அந்த இரும்பு குழாய்கள் நாளடைவில் துருப்பிடித்து ஓட்டை விழுகிறது.

இவ்வாறு சேதமடையும் பகுதியின் வழியாக தண்ணீருடன், கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க கழிவுநீர் ஓடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களை சற்று உயரத்தில் இருக்கும் வகையில் அமைத்துவிட்டால் அதில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு இல்லாமல் போகும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் ஓடையின் அருகில் செல்லும் தண்ணீர் குழாய்களை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story