மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மீண்டும் குறைப்புவினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றம்


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மீண்டும் குறைப்புவினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றம்
x

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணை

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த ஆண்டு நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறுவை சாகுபடிக்கு வழக்கம் போல் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை என்று கூறி, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.

இதனால் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென இறங்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் 50 அடிக்கு கீழே சரிந்த நிலையில் நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 32.84 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 334 கனஅடியாகவும் குறைந்து விட்டது.

மீண்டும் குறைப்பு

கடந்த மாதம் வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி என்ற அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 32.25 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 154 கனஅடியாக குறைந்து விட்டது. இதன்காரணமாக நேற்று மாலை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக மேலும் குறைக்கப்பட்டது.

விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்து அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தால் மட்டுமே அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.

கல் மண்டபம்

தற்போது தண்ணீர் திறக்கும் அளவு குறைப்பால், அணையில் இருந்து கீழ் மட்ட மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அணை மின்நிலையம் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் 20 ெமகாவாட் என மின் உற்பத்தியும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 32.25 அடியாக சரிந்துள்ள நிலையில் அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதியான கிழக்கு கோட்டையூர் பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த அரசர்களால் வடிவமைக்கப்பட்ட கல் மண்டபம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க தொடங்கி உள்ளது.


Next Story