கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்வு


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்வு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ள நிலையில், அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தொடர் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 865 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 12 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 2 ஆயிரத்து 17 கன அடி நீர் வந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,177 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை 8 நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,300 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் ஒரு பிரதான மதகு மற்றும் 3 சிறிய மதகுகளின் மூலம் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அணையின் உச்ச நீர்மட்டம் 52 அடி ஆகும். நீர்வரத்து ெதாடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை தனது முழு கொள்ளளவை எட்டி விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெனுகொண்டாபுரம்- 51.2, போச்சம்பள்ளி-40.2, பாரூர்-32.4, நெடுங்கல்-19, ராயக்கோட்டை-11, தளி-5, கிருஷ்ணகிரி-2.2.


Next Story