ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று அதிகரிக்கப்பட்டது.
தர்மபுரி,
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதாலும், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 76 ஆயிரத்து 905 கனஅடியாக குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று மாலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரத்து 500 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இதில் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி வீதமும், நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 500 கனஅடி வீதம் கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.85 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேற்று பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.