மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்வு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்வு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் தற்போது காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 11 ஆயிரத்து 368 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 11 ஆயிரத்து 700 க ன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது .இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் அந்த பகுதிகளில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு நேற்று மாலை முதல் 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் வழக்கம் போல 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று 118.68 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 118.70 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.


Next Story