ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் குறைந்தது
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரிய கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் அமைந்துள்ளது பெரிய கண்மாய். இந்த பெரிய கண்மாய்க்கு வரும் வைகை தண்ணீரை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகணை வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்ணாயில் ஓரளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனிடையே பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
விவசாயிகள் கவலை
இதனால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் பயிர் விவசாயத்திற்கும், தற்போது பருத்தி, மிளகாய் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் பெரிய கண்மாயிலும் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. தற்போது தண்ணீர் வரத்து மிக மிக குறைவாகவே இருந்து வருகின்றது. இதனால் கண்மாய் நீரை நம்பி விவசாயம் செய்துள்ள இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.