தற்போதைய குடிநீர் கட்டண முறை ரத்து:வீடுகளுக்கு வழங்கும் குடிநீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்


தற்போதைய குடிநீர் கட்டண முறை ரத்து:வீடுகளுக்கு வழங்கும் குடிநீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்
x

நாமக்கல் நகராட்சியில் தற்போதைய குடிநீர் கட்டண முறையை ரத்து செய்தும், வீடுகளுக்கு வழங்கும் குடிநீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நாமக்கல்

குடிநீர் கட்டணம்

நாமக்கல் முல்லை நகரில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது55). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் மீதும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் மீதும் குடிநீர் மற்றும் குப்பை அகற்றுவதற்கான கட்டணம் தொடர்பான வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழகத்தில் உள்ள எல்லா நகராட்சிகளிலும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உபயோகிக்கும் குடிநீரின் அளவை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போலவே குப்பை அகற்றுவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாமக்கல் நகராட்சியில் மட்டும் குடிநீர் இணைப்பு உள்ள வீட்டின் பரப்பளவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குப்பை அகற்றுவதற்கான கட்டணம் சொத்து வரி விகிதத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதனை மாற்றி, வழங்கும் குடிநீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் குப்பை அகற்றுவதற்கான கட்டணத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சட்டமீறல்கள் கிடையாது

கடந்த 2011-ம் ஆண்டில் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்ய உலக வங்கி நிதி உதவி பெறப்பட்டு, அவர்களின் விதிமுறைகளின்படி சதுரடி அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு முதல் குடிநீர் குழாய் இணைப்பு பெற்று உள்ளவர்களிடமிருந்து அவர்களது வீட்டின் பரப்பளவை கணக்கிட்டு குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதே நடைமுறை தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் செங்கோட்டை நகராட்சிகளிலும் பின்பற்றப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி நகராட்சி நிர்வாக ஆணையரின் உத்தரவின்படி சொத்து வரியுடன் குப்பை அகற்றுவதற்கான பயன்பாடு கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. இதில் எவ்விதமான சட்ட மீறல்களும் கிடையாது என்று நகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

குடிநீர் கட்டண முறை ரத்து

கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை முடிவு பெற்று இருந்த நிலையில், நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஆணைய உறுப்பினர் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில் நாமக்கல் நகராட்சியால் கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடிநீர் கட்டண முறை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் குப்பை அகற்றுவதற்கான கட்டண முறை தற்போது உள்ள நடைமுறையில் தொடரலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் குறைந்தபட்ச பராமரிப்பு கட்டணம் ஒன்றை நிர்ணயம் செய்து, அத்துடன் வழங்கப்படும் குடிநீரின் அளவிற்கேற்ப மட்டுமே குடிநீர் கட்டணம், நாமக்கல் நகராட்சி குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களிடம் வசூலிக்க வேண்டும். வழங்கப்படும் குடிநீர் அளவை கணக்கிடும் அளவுமானி இன்னும் அமைக்கப்படாமல் உள்ள குடிநீர் இணைப்பு உள்ள நுகர்வோர்களுக்கு 3 மாத காலத்திற்குள் அதனை அமைத்து அவர்களிடம் இருந்து குறைந்தபட்ச பராமரிப்பு கட்டணம் மற்றும் வழங்கப்படும் குடிநீர் அளவிற்கேற்ப குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தள்ளுபடி

இதேபோல் நாமக்கல் அர்த்தநாரி பள்ளி வீதியில் வசிக்கும் அழகுசாமி, மோகனூர் சாலையில் உள்ள பாரதி நகரில் வசிக்கும் பழனியம்மாள் ஆகியோர் நாமக்கல் நகராட்சி தங்களிடம் கூடுதலாக வசூலித்த குடிநீர் இணைப்பிற்கான வைப்புத் தொகை ரூ.3 ஆயிரத்தையும், கூடுதல் கட்டணங்களையும் திருப்பி தர வேண்டும் என்றும், இன்னும் பிற கோரிக்கைகளையும் வைத்து, நாமக்கல் நகராட்சி மீது தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளை தள்ளுபடி செய்தும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Next Story