தடுப்பணை கதவுகள் இயங்காததால் வீணாகும் தண்ணீர்
செம்பூர் கிராமத்தில் தடுப்பணை கதவுகள் இயங்காததால் தண்ணீர் வீணாகிறது.
வந்தவாசி
வந்தவாசி அருகே செம்பூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையில் இருந்து 3 கதவின் வழியாக திறந்து விட்டால் அந்த நீர் பெரிய ஏரியான மருதாடு ஏரிக்கும் அதனை சுற்றியுள்ள கல்லாங்குத்து, காவேரிப்பாக்கம், மேல்கொடுங்காலூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
செம்பூர் கிராமத்திற்கு கீழ்சாத்தமங்கலம், மாம்பட்டு, ஆராசூர், பொன்னூர், இளங்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெரிய ஏரிகளில் கால்வாய் நீர் மற்றும் உபரி நீர் வெளியேறி வந்தடையும்.
3 கதவுகள் கொண்ட அணையில் 2 கதவுகள் கடந்த பல ஆண்டு காலமாக திறக்கப்படாமலும், ஒரு கதவு மட்டுமே திறக்கப்பட்டு நீர் செல்லும் வழிதடமாக உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு விரைவில் கதவுகளை சரி செய்து விடுவோம் என்றார்.
விவசாயிகள் கூறுகையில், 3 கதவுகளும் திறக்கப்பட்டு இருந்தால் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியான மருதாடு ஏரி வேகமாக நிரம்பி இருக்கும்.
மேலும் அதை சுற்றியுள்ள 10 ஏரிகளுக்கு நீர் கிடைத்திருக்கும். கதவுகள் சரியில்லாத காரணத்தால் சுகநதியில் நீர் கலந்து வீணாகிறது.
எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கதவுகளை சரி செய்ய வேண்டும் என்றனர்.