தங்கம்மாள் ஓடையை தூர் வாரி இரு புறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் தீவிரம்
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள தங்கம்மாள் ஓடையை தூர் வாரி இரு புறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள தங்கம்மாள் ஓடையை தூர் வாரி இரு புறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தங்கம்மாள் ஓடை
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளது தங்கம்மாள் ஓடை. நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஒட்டுக்குளம் நிறைந்தால் உபரிநீர் தங்கம்மாள் ஓடையிலும் திறந்து விடப்படும். இந்த ஓடையில் திறந்து விடப்படும் தண்ணீர் உப்பாறுக்கு சென்று சேரும். உடுமலை நகராட்சிக்குட்பட்ட தங்கம்மாள் ஓடை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரும் இந்த ஓடையில் செல்கிறது.
சிறப்பு நிதி
இந்த நிலையில் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக இந்த நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிதியில் தங்கம்மாள் ஓடையை தூர்வாரி இரண்டு புறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் கட்டி மேம்படுத்துவதற்காக ரூ.12 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணிகளை தொடங்க பூமி பூஜை போடப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் நடைபெறவில்லை. பல மாதங்களுக்கு பிறகு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.
பணிகள் தீவிரம்
இந்த நிலையில் கடந்த நகராட்சி தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இந்த ஓடையை தூர்வாரி மேம்படுத்தும் பணிகளுக்கான நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்போது இந்த ஓடையை தூர்வாரும் பணிகள் ஒரு இடத்திலும், தூர்வாரப்பட்ட இடங்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணிகள் ஒரு இடத்திலும் என கடந்த சில நாட்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓடையில் கழிவுநீர் செல்வதால், அதை ஒருபுறம் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஒருபுறம் பணிகள் முடிந்த பிறகு, கழிவு நீர் அடுத்த பகுதிக்கு மாற்றிவிடப்பட்டு அந்த இடத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த பணிகள் நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.