கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி ஸ்டூடியோவில் இருந்ததா?


கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி ஸ்டூடியோவில் இருந்ததா?
x

சேலத்தில் கைதான கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி ஸ்டூயோவில் இருந்ததா? என்பது குறித்து அதன் உரிமையாளரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம்

சேலத்தில் கைதான கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி ஸ்டூயோவில் இருந்ததா? என்பது குறித்து அதன் உரிமையாளரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்டூடியோவில் திருட்டு

சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த சரவணன் என்பவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டூடியோவை உடைத்து அங்கிருந்த பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ஸ்டூடியோ உரிமையாளர் சரவணன் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், ஸ்டூடியோடிவில் இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போனதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காஞ்சீபுரத்தை சேர்ந்த அக்தர் பாஷா (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்

விசாரணையில், அக்தர் பாஷா திடுக்கிடும் தகவலை கூறினார். அதாவது, ஸ்டூடியோவில் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்தை திருடியதாகவும், அதனை தன்னுடைய நண்பர் கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த ஜமாலுதீனிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். உடனே போலீசார் ஜமாலுதீன் குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது ஜமாலுதீன் திருச்சியில் ஒரு விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் ஜமாலுதீனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அக்தர் பாஷா கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் ஜமாலுதீனிடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்தை மீட்டனர்.

கோர்ட்டில் ஒப்படைப்பு

பின்னர் அந்த பணத்தை சேலம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். ஜமாலுதீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஸ்டூடியோ உரிமையாளர் சரவணன், போலீசில் அளித்த புகாரில் ரூ.2½ லட்சம் என்று கூறியுள்ளார். ஆனால் அக்தர்பாஷா ரூ.1 கோடியே 3 லட்சம் திருடியதாக கூறியதுடன், அவரிடம் இருந்து அந்த பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

அப்படியே அது ஸ்டூடியோ உரிமையாளர் பணம் என்றால், அவர் எதற்காக கொள்ளை போன பணம் ரூ.2½ லட்சம் என்று போலீசில் கூற வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கொள்ளையன் கூறியது போல் ரூ.1 கோடிேய 3 லட்சம் ஸ்டூடியோவில்தான் இருந்ததா? என்பது குறித்து ஸ்டூடியோ உரிமையாளர் சரவணனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story