சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள்
விளாத்திகுளம் அருகே நடந்த எருது கட்டு திருவிழாவில், சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி மூலிகை வனக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை கொடை விழாவை முன்னிட்டு 'வடமாடு எருதுகட்டு திருவிழா' நேற்று நடந்தது. பொதுவாக எருது கட்டு திருவிழாவில் பெரிய மைதானத்தின் மையத்தில் நீண்ட கயிற்றில் காளை மாடு கட்டி போடப்படும். அந்த மாட்டை குறிப்பிட்ட நேரத்துக்குள் மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். அவ்வாறு அடக்கும் வீரர்களுக்கும், அடக்கப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த எருதுகட்டு திருவிழாவுக்காக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. முதலில் கோவில் காளைக்கு பூஜை செய்து அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து போட்டிக்கு கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக மைதானத்தின் மையத்தில் நீளமான கயிற்றில் கட்டப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடிக்கு சிக்காமல் வெற்றி பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கி, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேல்மாந்தை கிராமத்தில் முதல்முறையாக கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த எருது கட்டு திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.