வருகிற 29-ந் தேதிக்குள் காலாண்டு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
தர்மபுரி:
வருகிற 29-ந் தேதிக்குள் காலாண்டு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என்று தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அனுமதிச்சீட்டு ரத்து
தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு காலாண்டு (வருகிற 30.6.2023 வரை) சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள், தேசிய அனுமதிச்சீட்டு சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50 சதவீத அபராதத்துடன் வரி செலுத்த வேண்டிய கடைசி நாள் வருகிற 29.6.2023 ஆகும். எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை இணையதள முகவரி (https://parivahan.gov.in) ஆன்லைன் மூலம்50 சதவீத அபராதத்துடன் 29.6.2023க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் 30.6.2023 க்கு பிறகு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும். மேலும், சாலை வரி செலுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர 2023-2024-ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பசுமை வரியை செலுத்தாமல் பொது சாலையில் இயக்குவது தெரியவருகிறது.
எச்சரிக்கை
அவ்வாறு, 2023-2024-ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறைபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.