5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை


5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை
x

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,042 கனஅடியாக இருந்தது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,209 கனஅடியாக அதிகரித்தது. அணையில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 2,020 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் ரசாயன கழிவுடன் நுங்கும், நுரையுடன் வெளியேறியது.

நீர் திறப்பு குறைந்தது

இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 6,300 கனஅடி வந்து கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 5,735 கனஅடியாகவும், பிற்பகலில் 4,760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7,549 கனஅடியில் இருந்து 5,100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையில் 49.40 அடிக்கு தண்ணீர்உள்ளது.

தடை நீட்டிப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக். கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story