மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் உருக்கமான கடிதம்


மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் உருக்கமான கடிதம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனது வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை தனது தாயின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுங்கள் என்று மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண், உருக்கமான கடிதத்தை போலீசாருக்கு எழுதி உள்ளார்.

விருதுநகர்

சிவகாசி,

தனது வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை தனது தாயின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுங்கள் என்று மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண், உருக்கமான கடிதத்தை போலீசாருக்கு எழுதி உள்ளார்.

தற்கொலை

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் சாலைமுத்து மனைவி பாண்டிதேவி (வயது 37). இவர் சித்துராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சாலைமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் இவரது மகன் கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த பாண்டிதேவி நேற்று முன்தினம் (மகன் இறந்த நாளில்) தனது மகள் புவனேஸ்வரியுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் விசாரணை

பாண்டிதேவி, புவனேஸ்வரி இருவரும் தற்கொலை செய்து கொண்ட வீட்டிற்கு சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பாண்டிதேவி எழுதிய கடிதம் சிக்கியது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், பாண்டிதேவி தான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனது தந்தை, அண்ணன்கள், கணவன், மகன் என எல்லோரும் இறந்துவிட்டதாகவும், வீட்டில் ஒரு ஆண் வாரிசு கூட இல்லாத நிலையில் தாய் மற்றும் மகளுடன் வசித்து வந்ததாகவும், தொடர்ந்து வாழ பிடிக்காமல் இந்த முடிவை எடுப்பதாக உருக்கமாக எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமான வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது தாய் ஞானபழத்தின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் உதவி

பாண்டிதேவியின் கணவர் இறந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனுடன் போதிய வருமானம் இன்றி தவித்து வந்ததாக விருதுநகர் வந்த மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் பொருளாதார உதவி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறிது காலத்தில் மகன் மகாராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் பாண்டிதேவிக்கு சித்துராஜபுரம் அங்கன்வாடியில் அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் பணியில் சேர்ந்தார். அவருக்கு தேவையான அனைத்து பொருளாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் தனது மகள் புவனேஸ்வரியுடன், பாண்டிதேவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story