காடு போல மாறி வரும் மானாமதுரை வைகை ஆறு
மானாமதுரை வைகை ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல மாறி வருகிறது. பருவமழைக்கு முன்பு ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை வைகை ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல மாறி வருகிறது. பருவமழைக்கு முன்பு ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வைகை ஆறு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆறு செல்கிறது. இந்த ஆற்று தண்ணீர் மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுற்று வட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் முக்கிய காரணமாக இந்த வைகை ஆறு திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் பரப்பில் அமர்ந்து வைகையின் அழகை ரசிப்பதற்காக இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மாலை நேரத்தில் கூட்டம், கூட்டமாக வந்து செல்வார்கள்.
மேலும், சித்திரை, ஆடி திருவிழா போன்ற திருவிழா காலங்களில் இந்த ஆற்றில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள்.
காடாக மாறிய ஆறு
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த சிறப்பு வாய்ந்த வைகை ஆறு தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆற்றுக்குள் மணலும், தண்ணீரும் தெரியாத அளவிற்கு புற்கள், கருவேல மரங்கள், நாணல் செடிகள் வளர்ந்து ஆற்றை ஆக்கிரமித்துள்ளன. பார்ப்பதற்கு ஆறு போல அல்லாமல் காடு போல மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆற்றில் செடி,கொடிகள், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இதனால் மழைக்காலங்களில் ஆற்றுக்கு வரும் நீர்வரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. மேலும், மானாமதுரை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல அச்சம் அடைகின்றனர். பருவமழைக்கு முன்பாக வைகை ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பருவமழைக்கு முன்பு
இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறுகையில், மானாமதுரை வைகை ஆறு முன்பு மணல் பரப்பாக காட்சியளிக்கும். ஆனால் தற்போது மணல் இன்றி வெறும் தரைபோல உள்ளது. செடி, கொடிகளும், கருவேல மரங்களும், நாணல் புற்களும் ஆற்றை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. ஆற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்களால் நீர்வளம் பாதிக்கப்படும். மேலும் நீர்வரத்தும் தடைபடும் அபாயம் உள்ளது. ஆற்றை பெயரளவுக்கு தூர்வாரும் போது மீண்டும், மீண்டும் கருவேல மரங்கள் வளர்ந்து விடுகின்றன. எனவே, கருவேலமரங்களை வேரோடு எடுத்தால்தான் அடுத்து அங்கு மரங்கள் வளராது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வைகை ஆற்றில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றிட வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் சுரேஷ்:- வைகை ஆற்றின் குறுக்கே இருகரைகளையும் பலப்படுத்தி வைகை ஆற்றை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆற்றில் குப்பைகள், கழிவுகளை கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளநிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆற்றை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார்.