53 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்


53 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணை நீர்மட்டம் 53 அடியாக குறைந்தது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதற்கிடையே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 53.08 அடியாக உள்ளது. இதில் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பில் உள்ளது.

வைகை அணையில் இருந்து மதுரை மாநகர், தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை மட்டுமே உள்ளது. இதன்காரணமாக தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோடை காலம் தொடங்க உள்ளதால் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீரை இருப்பு வைப்பதுடன், வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை வைகை அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story