முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
கூடலூர்,
தேனி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். வழக்கமாக 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படும்.
இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 5,150 கனஅடிநீர் வருகிறது. அந்த நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
மேலும் மழை காலம் என்பதால் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 137.05 அடியாக உள்ளது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 158 கனஅடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 344 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 15.2, தேக்கடி 1, கூடலூர் 3.6, சண்முகாநதிஅணை 7,2, உத்தமபாளையம் 2, போடி 28.6, வைகை அணை 54, சோத்துப்பாறை 64, மஞ்சளாறு 6, பெரியகுளம் 35, வீரபாண்டி 17.2, அரண்மனைப்புதூர் 59, ஆண்டிபட்டி 83.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.