பொலிவிழந்து காணப்படும் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகள் அச்சம்
விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம், முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் ஒன்று விருத்தாசலம். மாவட்டத்திலேயே முக்கிய ரெயில் நிலையமும் விருத்தாசலத்தில் தான் அமைந்துள்ளது. ஆம், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்களும், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் விருத்தாசலம் வழியாக தான் சென்று வருகின்றன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எந்நேரமும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக விருத்தாசலம் ரெயில் நிலையத்தை இரவு நேரத்தில் தான் ஏராளமான ரெயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் பகல் நேரத்தை காட்டிலும் இரவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
டவுன் ரெயில் நிலையம்
இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் டவுன் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் நின்று செல்கிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏதும் நிற்பதில்லை. இதனால் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், திருச்சி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று வர, இந்த பயணிகள் ரெயிலை தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ரெயில் வரும் நேரங்களில் இந்த ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் பயணிகளின் வருகை மட்டும் அதிகளவில் உள்ளதே தவிர, அவர்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இந்த ரெயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பில் பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வந்தது.
சேதமடைந்த நடைபாதை
ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்றி டவுன் ரெயில் நிலையம் செல்லும் சிமெண்டு பாதையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ரெயில் நிலையம் செல்லும் நடைபாதைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன. ரெயிலில் இருந்து இறங்கி ஏறும் போது நடைமேடையில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் தூக்கிக் கொள்கின்றன.
அந்த அளவுக்கு நடைமேடை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. மேலும் நடைபாதையில் புற்கள், செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. காடுபோல் காணப்படும் அந்த ரெயில் நிலையத்தில் இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது.
அச்சப்படும் பயணிகள்
இந்த ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், அப்பகுதி முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. சூதாட்டம் விளையாடுவதற்கும், மது அருந்துவதற்கும் ஏராளமானோர் இந்த ரெயில் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் அங்குள்ள கழிவறையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், ஒருவித அச்சத்திலேயே வந்து செல்கின்றனர். இதனால் சமூக விரோதிகள் மீது ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூடிக்கிடக்கும் டிக்கெட் கவுண்ட்டர்
மேலும் டிக்கெட் கவுண்ட்டர் மூடிக் கிடப்பதால் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகளிடம், டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிப்பதால் பயணிகள் அவதி அடைகின்றனர். இதனால் டிக்கெட் கவுண்ட்டரை திறக்க வேண்டும்.
மேலும் பொலிவிழந்து காணப்படும் டவுன் ரெயில் நிலையத்தை அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கும் கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, டவுன் ரெயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும். மேலும் எந்நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.