7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள்


7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில், கலெக்டர் விசாகன் கலந்துகொண்டு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 812 ஆண்கள், 9 லட்சத்து 58 ஆயிரத்து 815 பெண்கள், 206 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.

இதுகுறித்து கலெக்டர் விசாகன் கூறியதாவது:-

பொதுமக்கள் பார்வைக்கு...

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. அதை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் முகவரி மாற்றம், திருத்தம், பெயரை நீக்கம் செய்தல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெறுதல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை வாக்குச்சாவடி மையங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து அங்கேயே வழங்கலாம்.

மேலும் www.nvsp.in எனும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம், Voters Help Line எனும் செல்போன் செயலி ஆகியவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சந்தேகம் இருந்தால் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story