இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:5 தொகுதிகளில் 12.36 லட்சம் வாக்காளர்கள்பெண்களை விட ஆண்களே அதிகம்


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:5 தொகுதிகளில் 12.36 லட்சம் வாக்காளர்கள்பெண்களை விட ஆண்களே அதிகம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12,36,506 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி தலைமை தாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கடந்த 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு 01.01.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தோர் மற்றும் விடுபட்டவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது.

ஆண் வாக்காளர்கள் அதிகம்

இதையடுத்து அதன் மீது தணிக்கை மற்றும் விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தோர், குடிபெயர்ந்தோர் இருமுறை பதிவு ஆகிய தகுதியற்ற இனங்களில் உள்ளவர்களை பெயர் நீக்கம் செய்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளில் திருத்தம் செய்யக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 651 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 10 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்களும், 163 இதர வாக்காளர்களும் என மொத்தம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 506 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

கலந்து கொண்டவர்கள்

பொதுமக்கள் இந்த பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, உதவி கலெக்டர்கள் கீதாராணி, ராஜசேகரன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி, அரசியல் கட்சி பிரதிநிதிகளான தி.மு.க. சார்பில் வக்கீல்கள் தாஸ், ஆ.மணி, எம்.வி.டி.கோபால், அ.தி.மு.க. சார்பில் தகடூர்விஜயன், பொன்னுவேல், அசோக்குமார், பா.ஜ.க. சார்பில் வெங்கட்ராஜ், தே.மு.தி.க. சார்பில் சரவணன் மற்றும் தாசில்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story